Dr

பொதுவாக நமது பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. வீடு, கணவன், குழந்தைகள், வேலைக்குப் போகும் பெண்களாயிருந்தால் ஆபீஸ் என்று அவர்கள் நினைவு முழுவதுமே மற்றவருக்குத்தான். மேலும், போதும் போதாதற்கு வீணாய்ப் போகிறதே என்று மிச்சம், மீதி, பழையது என்று எல்லாவற்றையும் உண்கிறார்கள். “அதான் நாள் பூரா வேலை செய்கிறோமே, தனியா எக்ஸர்ஸைஸ் வேற வேணுமா?” என்று உடற்பயிற்சிகளிலும் அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
உண்மையில் அவர்கள்தாம் தமது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். வேலைக்கும் போய், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தமது உடல் நலத்தையும் சரிவர பேணிகாக்கும் பல பெண்கள் நம்மிடையே உண்டு. அவ்வாறான பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதன் மூலம், நமது பெண்களும் தமது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வார்கள் என்பது எமது நம்பிக்கை. “பிரபலங்கள் வழங்கும் ஹெல்த் டிப்ஸ்” என்ற இப்பகுதியில் இந்த முறை நாம் சந்திக்கப்போகும் பிரபலம்: முனைவர். திருமதி. K. சித்ரா Ph.D., அவர்கள்.
“நாளைக்கு என்ன சமையல் என்பதிலாகட்டும், அல்லது அடுத்த வாரம் செமினாரில் எதைப் பேசுவது என்பதிலாகட்டும், சிறிய விஷயம் பெரிய விஷயம் என்றில்லாமல் அனைத்து விஷயங்களிலுமே தெளிவாகத் திட்டமிட்டு செயலாற்றும் தன்மை, பார்த்ததுமே மரியாதையைத் தோற்றுவிக்கும் கண்ணியமான தோற்றம், வயதை ஊகிக்க முடியாத மாசு மருவற்ற தெளிவான முகம், வாழ்க்கையில் வெற்றியடைந்த எல்லாப் பெண்களிடையேயும் காணும் அந்தக் கம்பீரத் தோற்றம். இவைகளின் ஒட்டுமொத்தக் கலவைதான் இப்பகுதிக்காக நாம் சந்திக்கப்போகும் பிரபலம் முனைவர்.திருமதி. K. சித்ரா Ph.D அவர்கள்.
அளவாகப் புன்னகைக்கிறார். பேச ஆரம்பிப்பதற்கு முன்பு யோசிக்கிறார். பேச ஆரம்பித்து விட்டால் மடமடவென்று வார்த்தைகள் பிசிறின்றி கோர்வையாய் அழுத்தமாய் விழுகின்றன.
முனைவர். திருமதி. K. சித்ரா அவர்கள் தற்போது கோவை இராமகிருஷ்ணா மேலாண்மைக் கல்விக் கூடத்தில் இயக்குனராய் பணிபுரிந்து வருகிறார். ஆனால், அவரின் ஒரு முகம் மட்டுமே அது. “பாட்சா ரஜினி” போல் அவருக்குப் பல்வேறு முகங்கள். பல்வேறு பணிகள்.
  • கோவை மேலாண்மைக் கழகத்தில் (Coimbatore Management Association) துணைச் செயலாளர் பதவி.
  • இந்திய தொழிற்கூட்டமைப்பின் (CII ) ஒரு பிரிவான Industry Institute Interaction Panel ன் செயற்பாட்டுக் குழு உறுப்பினராய் உள்ளார்.
  • கோவை உற்பத்தித் திறன் குழுவில் (Coimbatore Productivity Council) செயற்குழு உறுப்பினர் பதவி (Governing Body Member)
  • தவிரவும் அவர் பணிபுரியும் கல்லூரியில் தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
  • அதே கல்லூரியில், மகளிருக்கான அதிகார மையத்தின் (Women Empowerment Cell)பொறுப்பாளராகவும் உள்ளார்.
  • பல்வேறு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் MBA படிப்பிற்கான பாடத்திட்டக் குழுக்களில் உறுப்பினர்.
  • நிறைய ஆராய்ச்சி மாணவர்களை நெறிப்படுத்தும் பணி என்று நாள் முழுக்க ‘மேடம்’ பிஸிதான்.

அவரே கூறுவது போல், ” ஒரு நிமிஷங்கூட வேஸ்ட் பண்ண முடியாதுங்க. எதையுமே திட்டமிட்டு செய்ய வேண்டியதிருக்குங்க” வெவ்வேறு விதமான பணிகள் வெவ்வேறு விதமாய் இருந்தாலும் அததற்கென்று தனியாய் நேரம் ஒதுக்கி தெளிவாய்த் திட்டமிடுகிறார். அதை முறைப்படியும் கடைபிடிக்கிறார்.
“எதையுமே சரியாப் ப்ளான் பண்ணிக்கனும்ங்க. அதய முடிஞ்ச வரைக்கும் பாலோ பண்ணனும்”. நான் அடிப்படையில் ஓர் ஆசிரியை. நான் என் மாணவர்களுக்கு என்ன சொல்லித் தருகின்றேனோ, அதை நான் முதல்ல செய்யனும். உதாரணமாக தினசரி நான் இரண்டு செய்தித்தாளாவது படிக்க வேண்டும். வீட்டிலிருந்து கல்லூரி வரும்போது ஒன்று, கல்லூரியிலிருந்து வீட்டிற்குப் போகும்போது ஒன்று என இரண்டையுமே நான் படித்து விடுகிறேன். எதையுமே முதல்ல நாம செய்யனும். பிறகு மற்றவர்களை செய்யச் சொல்வோம். இதுதான் எனது பாலிசி”. தெளிவாக இருக்கிறார்.
நள்ளிரவு 5 மணிக்கு, மன்னிக்கவும், அதிகாலை 5 மணிக்கு தனது நாளைத் தொடங்கி விடுகிறார். வீட்டிலேயே டிரெட் மில், சைக்கிள் வைத்திருக்கிறார். முக்கால் மணி நேரம் தீவிரப் பயிற்சி. பின் அரைமணி நேரம் யோகா.
காலை உணவாக ஏதாவது ஒரு சிறு தானிய உணவு அல்லது ராகிக் கூழ் அல்லது கம்பங்கூழ். பொதுவாக இட்லி தோசை உண்பதில்லை. காலை 11 மணிவாக்கில் தேன், எலுமிச்சை கலந்த சர்க்கரையில்லாத கிரீன் டீ.
மதிய உணவாக கொஞ்சம் சாதம், பருப்பு, நிறையக் காய்கறிகள், ஏதாவது ஒரு கீரை, கொஞ்சம் தயிர்.
இடையில் நொறுக்குத் தீனிகள் எதுவும் இல்லை. இரவு உணவாக ராகி தோசை, திணை உப்புமா போன்ற சிறுதானிய வகை உணவு. இரவு ஏழரை மணிக்குள் இரவு உணவை முடித்து விடுகிறார்..
“தங்களுடைய பணிச்சூழல் காரணமாக, 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட நேரும்போது எவ்வாறு ‘ செலக்டிவ்வாக’ தங்களுக்குத் தேவையானதை உண்கிறீர்கள்?
“அவ்வாறான சமயங்களில் பெரும்பாலும் மசாலா உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றைத் தவிர்த்து விடுவேன். சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமிருந்தால் கொஞ்சம் ஸ்வீட் அல்லது அரைக் கரண்டி (Scoop) ஐஸ்கிரீம் என்று தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியதுதான்.”
அடுத்த நாள் உணவிற்கு என்ன சமைப்பது என்பதை முதல் நாள் இரவிலேயே தீர்மானித்து விடுகிறார். வீட்டில் பணிபுரிய ஆட்கள் இருந்தாலும் “தன் சமையலறையில் தானே மகாராணியாய்” அவரே கைப்படச் சமைக்கிறார். பிரிட்ஜில் செல்போன், டிவி தவிர மற்ற எல்லாவற்றையும் வைக்கும் இந்தக் காலத்தில் அதிகபட்சம் ஒரு நாளைக்குத்தான் காய்கறிகளை வைக்கிறார். கெட்டுப்போன காய்கறிகளை கெட்டுப்போன பகுதியை மட்டும் நறுக்கிவிட்டு நல்லதை சமைக்கும் பழக்கம் இல்லை. அறவே தள்ளி விடுகிறார்.
சமையலுக்கு என்ன எண்ணெய் உபயோகிக்கிறீர்கள்?
எங்கள் குடும்பத்தில் என் கணவர், மகள், நான் என மூன்று பேர் மட்டும் தான். ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் எண்ணெய் மட்டும் தான். உப்புமா, தோசை என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து இந்த ஒரு லிட்டரிலேயே முடித்து விடுகிறேன். போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை முடிந்த மட்டும் தவிர்த்து விடுகிறேன். தவிரவும், ஒரே விதமான எண்ணெயைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு விதமான எண்ணெயைப் பயன்படுத்துகிறேன். உதாரணமாக, தோசைக்கு ஆலிவ் எண்ணெய், உப்புமாவிற்கு நல்லெண்ணெய்…. இது மாதிரி.
பொதுவாக எங்கள் வீட்டில் அனைவருக்குமே உடல் நலன் குறித்த புரிதல் இருப்பதால் இது எனக்கு எளிதாகிறது.
உடல் நலனைப் பராமரிப்பதற்கு வேறு ஏதாவது ஸ்பெஷலாக?
என் மகளின் பிறந்த நாளை எங்களுடைய ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்யும் நாளாக மாற்றியுள்ளோம். அந்நாளில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறோம். குறிப்பாக ‘மேமோ கிராபி’. என்னுடைய 40 வயதிலிருந்து ‘செர்வைகல்’ புற்று நோய்க்கான பரிசோதனையையும் தவறாமல் செய்து வருகிறேன். ஏனெனில், புற்று நோயின் தீவிரத்தை நான் அறிவேன்.
சரியாகச் சொன்னீர்கள் மேடம்! நமது நாட்டில் மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வைக் காட்டிலும் ‘செர்வைகல் கேன்சர்’ பற்றிய விழிப்புணர்வு குறைவே. உண்மையில் நமது நாட்டில் வருடத்திற்கு 80,000 மேற்பட்ட இந்தியக் குடிமகள்கள் செர்வைகல் கேன்சரால் இறந்து போகிறார்கள். ஓகே மேடம். உடல் நலன் பற்றிய பொதுவான அறிவுரை என்ன?
இன்றைய சூழலில், நமது வாழ்க்கையின் நாட்கள் நீட்டிக்கப் பட்டிருக்கின்றன. 80 வயதிலும் கூட நாம் துடிப்புடனும், நலமுடனும் செயல்பட வேண்டியதிருக்கிறது. கூட்டுக் குடும்பங்கள் என்ற அமைப்பே உடைந்து போய் விட்டது. அதிலும் குறிப்பாக ஒரு குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் நாம் நமது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. பின்னாளில் நாம் நமது குழந்தைகளுக்கு உதவியாய் இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, அவர்களுக்கு நாம் சுமையாய் இருக்கக் கூடாது. எனவே, நாம், குறிப்பாக நமது பெண்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தியே ஆக வேண்டும்.
இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு என்ன விதமான அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
உண்மையில், இன்றைய இளம் பெண்கள் அதிகளவில் மனதளவிலும், உடலளவிலும் பணிபுரிகிறார்கள். அதற்கு ஈடாக அவர்கள் சக்தியுடன் செயல்பட வேண்டும். ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருக்கிறார்கள் அல்லது மிகவும் குறைவாக சாப்பிடுகிறார்கள். இது மிகவும் தவறு. நாளடைவில் அவர்கள் சக்தியற்றுப் போய்விடுவார்கள்.
பொதுவாக நமது வாழ்க்கை முறையில் ஒரு ஒழுங்கைக் கடைபிடித்தாலே பாதி ஆரோக்கியம் வந்து விடும். ஏதாவது உடற்பயிற்சி அல்லது யோகா தவறாமல் தினந்தோறும் செய்யுங்கள். அதற்கென்று டி.வி பார்த்துக் கொண்டே ‘எக்ஸ்ர்ஸைஸ்’ செய்யாதீர்கள். என்னைப் பொறுத்த வரை நான் ஒரு நாள் கூட யோகா செய்யாமல் இருப்பதில்லை. வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உணவில் சம நிலையைக் கையாளுங்கள். இதற்கென்று நீங்கள் ஊட்டச் சத்து நிபுணராய் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் தினசரி உண்ணும் உணவில், சாப்பிடும் பழங்களில் காய்கறிகளில் எல்லாவித நிறங்களும் இருந்தாலே அது கிட்டத்தட்ட சரிவிகித உணவுதான்.
  • எதையும் திட்டமிட்டுச் செய்கிறார்
  • நிறையப் பழங்கள் உண்கிறார்
  • உடற்பயிற்சி யோகா தவறுவதில்லை
  • எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் அறவே இல்லை
  • உணவிற்கு எல்லாவித எண்ணெய்களையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறார்
  • வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை கட்டாயம்
  • சிறு தானிய உணவுகள் மிக விருப்பம்.
  • காஃபி டீ அதிகபட்சம் 2 கப் மட்டும்

0 comments:

கருத்துரையிடுக