Kathir

“பிரபலங்கள் வழங்கும் ஹெல்த் டிப்ஸ்” என்ற பகுதியில் நாம் இம்முறை சந்திக்கப் போகும் பிரபலம் கதிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. E..S. கதிர் அவர்கள்.
கதிர் பொறியியல் கல்லூரி, கதிர் கல்வியியல் கல்லூரி, கதிர் வித்யா மந்திர் (CBSE) பள்ளிஎன்று பல்வேறு கல்விப் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். தற்போது கதிர் கலை அறிவியல் கல்லூரிக்கான ஆரம்பப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவரின் தந்தை முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு. K. A.செங்கோட்டையன் அவர்கள்.
திரு. கதிர் அவர்களின் துணைவியார் திருமதி. லாவண்யா கதிர் அவர்கள் கதிர் கல்விக் குழுமத்தின் செயலாளராக கணவரின் கல்விப் பணிக்குத் துணைபுரிகிறார். +2 படிக்கும் ஒரே மகன் என்று “அளவான குடும்பம்”.
“வாங்க” என்று முகமலர்ந்து வரவேற்கிறார். “நானென்ன அவ்வளவு பிரபலமா?” என்று மிகவும் தயங்குகிறார். மிகவும் வற்புறுத்தலின் பேரிலேயே சம்மதிக்கிறார். மிகப்பெரிய பின்புலத்தில் இருந்து வந்தாலும் மிகவும் எளிமையோடு உரையாடுகிறார். அவரே “சற்றே பெரிய சீனியர் மாணவர்” போலத்தான் தோன்றுகிறார். பேச ஆரம்பித்த 5வது நிமிடத்திலேயே மிக நெருக்கமானவரோடு உரையாடுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார். விவசாயக் குடும்பம் என்பது அவரின் கையைப் பார்த்தாலே தெரிகிறது. எதிரில் அமர்ந்து பேசுபவரின் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்துப் பேசுகிறார். மிகவும்“பவர்புல்லான கண்கள்”. எதிரில் அமர்ந்திருப்பவரின் உள்ளத்தை ஊடறுக்கும் பார்வை. புன்னகை நிறைந்த முகத்தில் லேசாகத் தெரியும் கடுமை,” நான் ஒரு ஸ்டிரிக்ட் ஆபிசர்” என்று சொல்லாமல் சொல்கிறது. மனதில் பட்ட எதையும் “ப்ளிச்” சென கொங்குத் தமிழில் பேசுகிறார். வெண்மையான பற்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.
” பீடி, சிகரெட், மது ஏன் வெத்தில பாக்கு போன்றவைகளை மோந்துங்கூட பாத்ததில்ல”

என்று கொங்குத் தமிழில் விளாசுகிறார். கொங்குத் தமிழில் ‘மோந்து’ என்றால் ‘முகர்ந்து’ என்று அர்த்தம்.
“கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருப்பது நல்லொழுக்கம்.இதில் எனது தாய் தந்தையர் வளர்ப்பு மிக முக்கியமானது. சிறிய வயதிலேயே சொல்லிக் கொடுத்தது பெரியவனானதும் அவைகளின் மீது நாட்டம் இல்லாமல் போய்விட்டது. தவிரவும் எனது நண்பர்களும் அவ்வாறே அமைந்தது நான் செய்த பாக்கியம்” உரத்த சிரிப்புடன் விளக்கமளிக்கிறார்.

அதிகாலை 6 மணிகெல்லாம் தனது நாளைத் தொடங்கி விடுகிறார். நேரத்தில் தூங்கி நேரத்தில் எழுந்திருப்பது இவரின் பழக்கம். ” எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறோமோ அவ்வளவு நல்லது. நேரத்தில் எழுந்தால் அந்த நாள் நம்முடையது. லேட்டாய் எழுந்தால் அந்த நாள் மற்றொருவடையதாகிறது.எனவே முடிந்த வரை காலையில் 6 மணிக்கெல்லாம் எனது நாளைத் தொடங்கி விடுகிறேன்” தெளிவாய், அழுத்தமாய் வார்த்தைகள் விழுகின்றன. அடுக்கடுக்காய் பணிச் சுமைகள் அழுத்திய போதும், திறம்பட நேர நிர்வாகம் செய்ய இது வசதியாய் இருகிறது என்கிறார்.
ஆனால், நள்ளிரவு 6 மணிக்கு எழுந்திருப்பது என்பது நமக்கு மிகவும் கடினமாயிற்றே.! அதற்கும் தயாராய் பதில் வைத்திருக்கிறார். ” 27 நாள் சித்தாந்தம் என்று ஒன்று உண்டு. தொடர்ச்சியாக 27 நாட்கள் நீங்கள் ஒரு காரியத்தைச் செய்து பாருங்கள். 28 வது நாள் அது உங்களுக்கு எளிதில் கை கூடி விடும்.எனவே நீங்கள் ஒரு 27 நாட்களுக்கு அதிகாலையில் எழுந்து பாருங்கள். 28 ம் நாளிலிருந்து உங்களால் வெகு நேரம் தூங்கவே முடியாது”.
காலை உணவாக இட்லி, சப்பாத்தி என்று ஏதாவது ஒரு உணவு. அதிக காரம் அதிக உப்பு சேர்ப்பதில்லை. உணவில் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.குறைவாகத்தான் சாப்பிடுகிறார். இடையில் ஸ்நாக்ஸ் என்று எதுவும் பழக்கமுமில்லை. அதற்காக எதையும் விலக்குவதுமில்லை. நிறையத் தண்ணீர் குடிக்கிறார். ஜூஸ், பழங்கள், இளநீர் போன்று ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்கிறார். மதிய உணவாக சாதம், காய்கறிகள், கீரை என்று நமது பாரம்பரிய உணவுகள்தான். ரசம் ரொம்ப அவசியம். கொஞ்சம் தயிர் சேர்த்துக் கொள்கிறார். வயிறு புடைக்க உண்பதில்லை. அதிலும் அளவுதான். மாலையில் பயிறு வகையிலான ஏதாவது ஒரு சுண்டல். காலையில் “வாக்கிங்” செல்ல நேரமிருப்பதில்லை. எனவே, மாலையில் பணி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் “வாக்கிங்” செல்கிறார். இரவு உணவாக தோசை, சப்பாத்தி என்று ஏதாவது ஒரு வகை. அதிகபட்சம் 10 மணிக்கெல்லாம் உறங்கச் சென்று விடுகிறார்.
பொதுவாக உணவில் இது விருப்பம் இது விருப்பமில்லை என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. எது நல்லதோ அதை அளவாய் உண்கிறார். “நான் எல்லாமே சாப்பிடுவேங்க. பர்கர், பீட்சா போன்றவைகளைக் கூட சாப்பிடுவேன். ஏன் இன்றைய இளைஞர்கள் அதை விரும்பி உண்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. ஆனால், எதையுமே பழக்கமாக்கிக் கொள்வதில்லை”.
“ஆமாங்க, ஒரு மனுசனுக்கு ஹெல்த் ரொம்ப முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நமது உடம்பை நாம் நன்றாகப் பார்த்துக் கொண்டால்தான் நாம் மற்றவர்களுக்கு உதவ முடியும்.எனவே, அதற்காகவாவது நாம் ஹெல்த்தியாய் இருப்பது நல்லது”. அவரின் சமூக அக்கறையை அழகாய் வெளிப்படுத்துகிறார்.
இன்றைய இளைய தலைமுறைமீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். “நமது நாடு இளைஞர்களின் நாடு. இன்றைய இளைஞர்கள் நவீன தொழில் நுட்பத்திலும், அறிவியல் மனப்பான்மையிலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைய இளைஞர்கள் கடின உழைப்பாளிகளும் கூட. எனவே, கடுமையாய் உழைக்க, தங்களது குறிக்கோள்களை அடைய அவர்களுக்கு நல்ல திடமான ஆரோக்கியமான உடல் தேவை. இறைவன் கொடுத்த ஆரோக்கியத்தை அவர்கள் தொலைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.”
“ஆனால் பொதுவாக இன்றைய இளைஞர்கள் இரவு வெகு நேரம் வரை விழித்திருக்கிறார்கள், பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்களே” என்று கேட்டால், கண்களை மூடி யோசிக்கிறார். நீண்ட நேர மௌனத்திற்குப் பிறகு, ” ஆமாம். அவர்கள் நிறைய நேரம் உழைக்க வேண்டியதிருக்கிறது.ஆனால், எதன் பொருட்டும் காலை உணவைத் தவிர்ப்பது அவ்வளவு சரியல்ல. அது மிகவும் தவறு. அவர்கள் ஹெல்த்தியாய் இருக்க வேண்டும். அது முக்கியம்” என்கிறார். “எங்கள் கல்லூரி உணவகத்தில் நல்ல ஆரோக்கியமான உணவையே வழங்குகிறோம். தவிரவும், எல்லா வகை உணவுகளையும் அவர்கள் உண்ண வேண்டும் என்பதற்காக நமது பாரம்பரிய உணவுகளையும் அவர்களுக்கு வழங்குகிறோம். குறிப்பாக எமது பள்ளிக் குழந்தைகளுக்கு புரோட்டீன் சத்து அதிகமுள்ள பயறு வகைகள் அதிகம் கொடுக்கிறோம். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது”.
உங்களுடைய பணிச்சூழல் காரணமாக 5 நட்சத்திர உணவகங்களில் அல்லது வெளியிடங்களில் உணவருந்தும்போது எவ்வாறு உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உண்கிறீர்கள்?
“பொதுவாக நான் வீட்டுப் பறவை. வீட்டுச் சமையல் தான் என்னுடைய முதல் சாய்ஸ். என்னதான் சுவையாக இருந்தாலும் வீட்டில் சமைப்பதைப் போன்று நம்மால் எதிர்பார்க்கவே முடியாது. அவ்வாறான சமயங்களில் பழங்கள்தான் என்னுடைய சாய்ஸ். 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட நேர்ந்தாலும் சைவ உணவே என்னுடைய சாய்ஸ்”.
அசைவம் சாப்பிடுகிறவர்தான் என்றாலும் தற்போது மிகவும் குறைத்து விட்டார்.”ஆமாங்க, என்னதான் இருந்தாலும் நாம் ஒரு நிலையில் சைவ உணவிற்கு மாறித்தான் ஆக வேண்டும். எனவே தற்போது அசைவ உணவுகளை விரும்பி உண்பதில்லை. சைவ உணவுதான் என்னுடைய பேவரைட்”.
பொதுவாக நமது இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் ஹெல்த் சம்பந்தமான அறிவுரைகள் என்ன?
இன்றைய இளைஞர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் தங்கள் உடல் நலனையும் மன நலனையும் பாதுகாத்திட வேண்டியதிருக்கிறது. உண்மையில் அவர்கள் நல்ல மனிதர்களாய்த்தான் பரிணமளிக்க வேண்டியதிருக்கிறது. எங்கள் கதிர் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களை நாங்கள் நல்ல மனிதர்களாகத் திகழ எங்களின் பங்களிப்பை விடாது நல்குகிறோம்.
இருகை கூப்பி விடை தருகிறார் அந்த நல்ல மனிதர்.

0 comments:

கருத்துரையிடுக