நமது வாழ்க்கை நமது கையில்!

chariman
நாம் நலமுடனும், ஆரோக்கியமாகவும் சிறப்புடன் வாழ உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு நாம் கூறும் பொதுவான காரணம், “நேரமில்லைங்க” என்பதுதான். உணவுக் கட்டுப்பாட்டில் நாம் கவனம் செலுத்தாதற்கு நாம் சொல்லும் காரணம் , ” எங்க வேலை அந்த மாதிரிங்க, செம வொர்க் பிரஷ்ஷ்ர்ங்க”. ஆனால் நம்மைக் காட்டிலும் அதிக வேலைப் பளுவுடனும், நேரமில்லாமலும், அதிக மன அழுத்தத்துடனும் இருக்கும் பலர் இதை இலாவகமாக கையாள்கிறார்கள்..
எனவே, நம் சூழலில் வாழும் அத்தகைய பெரியோர்களைக்  கண்டு அவர்கள் தமது உடல் நலனை எவ்வாறு பேணிக் காக்கிறார்கள் என்பதை கூறும் பகுதியே இது. அவர்களின் வாழ்க்கை முறை, உடற்பயிற்சிக்கு  அவர்கள் செலவிடும் நேரம், எந்த மாதிரியான உடற்பயற்சிகளை  அவர்கள் மேற்கொள்கிறார்கள், எந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது , நாமும் அவ்வாறே நமது உடல் நலனை பேணிக் காப்பதற்கு அது ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
இந்த வாரம் நாம் சந்திக்கும் பிரபலம், கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள  “யுனைடெட் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி ” கல்லூரியின் தலைவர் , திரு. S. சண்முகம் BE,MS., MISTE., அவர்கள்.
அவரே ஒரு கல்லூரி மாணவர் போலத்தான் தோன்றுகிறார்.பார்த்ததுமே யாரையும் வசீகரிக்கும் முகம். ” வாங்க” என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறார்.” என்ன சாப்பிடறீங்க? டீ? காஃபி?கூல்டிரிங்க்ஸ்? ” என்ற உபசரிப்பில் அவரின் உண்மையான அன்பு மிளிர்கிறது.  அழுத்தமான கைகுலுக்கலில் அவரின் தன்னம்பிக்கை நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
மிகச் சிறிய வயதில் மிகப் பெரிய பொறுப்புகளை லாவகமாகக் கையாள்கிறார். ரோஸ் நிற உதடுகள் புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை என்று உரக்கப் பறைசாற்றுகின்றன. தன்னுடைய +2 தேர்வில், வேதியியல் பாடத்தில் 200 க்கு 199 என்பதற்குப் பதிலாக 149 என்று தவறுதலாக அச்சிட்டதால் ஏற்பட்ட பிரச்சினைகளின் வலி மாறாமலேயே பேசுகிறார். ” அது சரியாக இருந்திருக்கும் பட்சத்தில், தங்களின் வாழ்க்கை வேறு மாதிரியாய் இருந்திருக்குமோ?” என்றால், “அப்படியெல்லாம் இல்லைங்க. ஒவ்வொரு பிரச்சினையுமே நமது திறமைக்கு விடப்படும் சவால்தான். அதன் மூலம் தான் நாம் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம் பிறக்கும்” என்ற அவரது மனோபாவத்தில்மன அழுத்தம்” என்றுமே அவரை அண்டாது என்பது புரிகிறது. தொடர்ச்சியாக மாணவர்களும் பெற்றோர்களும் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டே இருக்கிறார்கள். அந்த அழைப்பினூடேயே  நம்முடன் உரையாடுகிறார்.
அதிகாலை அலாரம் வைத்தது போல் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார். வீட்டிலேயே டிரெட் மில் வைத்திருக்கிறார். சுமார் 40 நிமிடம் அதில் வேர்க்க வேர்க்க அதில் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார். பயிற்சி முடிந்தவுடன் செய்தித்தாள் வாசிப்பு. வியர்வை அடங்கியதும் சூடான தண்ணீரில் அரை எலுமிச்சம்பழம் பிழிந்து கூடவே 3 டீஸ்பூன் தேன் கலந்து அருந்துகிறார். இது நாள் முழுவதும் சோர்வடையாமல் இருக்க உதவும் என்கிறார்.
கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள  “யுனைடெட் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி” கல்லூரிக்குள் காலை 7.30 மணிக்குள் எல்லாம் வந்து விடுகிறார். “கல்லூரிக்குள் பொதுவாக நான்தான் முதலில் நுழைவேன். அந்நேரத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.எங்களது கல்லூரி 132 ஏக்கர் பரவியுள்ளது. மூன்று தளங்கள் கொண்டது. முழுவதும் சுற்றி முடிப்பதற்கே எனக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிடும். இதுவே மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆகிவிடுகிறது. தவிரவும், சீக்கிரமே நாம் பணிபுரியும் இடத்திற்கு வந்து விடுவதால், முக்கியமான பிரச்சினைகள் எல்லாம் ஆரம்பத்திலேயே நமது கவனத்திற்கு வந்து விடும். அவ்வாறான பிரச்சினைகளை நமது நாளைத் தொடங்குவதிற்குள்ளேயே  கண்டறிந்து விடுவதால் வீணான டென்சனைத்  தவிர்த்து விடலாம்”.
இந்த வேலைகளை எல்லாம் முடித்த பின்னர்தான் தனது காலை உணவைத் தொடங்குகிறார். கல்லூரி விடுதியின் மெஸ்ஸில் தயாராகும் உணவுதான் இவருக்கும். எனவே அன்றன்றைய மெனுப்படிஒரு நாள் இட்லி, மறுநாள் சேவை, வேறொரு நாள் பொங்கல் என்று மாறிக் கொண்டே இருக்கும்.
11 மணி வாக்கில் எல்லாப் பழங்களையும் சேர்த்து கலந்த புரூட் சாலட் எடுத்துக் கொள்கிறார். மதிய உணவில் சாதம் அதிகமாக சேர்த்துக் கொள்வதில்லை. மாறாக அதிக அளவில் காய்கறிகள் சேர்த்துக் கொள்கிறார்.  தனது பணியின் காரணமாக மதிய உணவு தாமதமாகும் போது, கம்பங் கூழ் 2 கப் கொஞ்சம் பச்சை வெங்காயத்துடன் அருந்துகிறார். நமது பாரம்பரிய உணவின் மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை சகப் பணியாளர்களுடனும், சில மாணவர்களுடனும் ஒரு மணி நேரம் ஷட்டில் விளையாடுகிறார். இரவு உணவு பெரும்பாலும் வீட்டில்தான். புரோட்டா போன்ற உணவுகளை அறவே தவிர்த்து விடுகிறார்.  அசைவம் சாப்பிடுபவர் என்றாலும் சைவ உணவுதான் இவருடைய ஃபேவரிட். அதிலும் ஹோட்டல்களில் சாப்பிடுவதை அதிகமாய் விரும்புவதில்லை. வீட்டுச் சாப்பட்டிற்குத்தான் சார்  முக்கியத்துவம் கொடுக்கிறார்.
“எப்பவும் பிரெஷ்ஷா இருக்கீங்களே, எப்படி?” என்றால் சிரிக்கிறார். ” நமக்குப் பிடித்த வேலையை நாள் முழுவதும் செய்யும் போது சோர்வு வராது. நான் அடிப்படையில் ஒரு ஆசிரியன். இன்னமும் எங்கள் கல்லூரியில் நான் வகுப்பு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.மாணவர்களோடு பழகுவதும், அவர்களுடன் அறிவைப் பகிர்ந்து கொள்வதும், ஒரு தியானம் போன்று சந்தோசமாய் இருக்கின்றது.”
“இன்றைய இளைஞர்களுக்கு என்ன மாதிரியான ஹெல்த் டிப்ஸ் வழங்க விரும்பறீங்க?”
“நானும் இளைஞன்தாங்க .இன்னும் சொல்லப் போனா அவங்ககிட்ட இருந்துதான் நான் தொடர்ச்சியா கத்துக்கிட்டிருக்கிறேன். அவங்களுக்கு சரியா நாமும் இருக்கணும்னா நம்மைப் புதுப்பிச்சிட்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் அவங்க நம்மை “ஓவர் டேக் ” பண்ணீட்டு போயிட்டே இருப்பாங்க”
உண்மை தான். இன்றைய் இளைஞர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஈடாக தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அவரின் ஆர்வத்தில்தான் அவருடைய வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது

மிக முக்கியம்: இவர் மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை.

0 comments:

கருத்துரையிடுக