gmபார்வையில் கனிவு. சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரையும் சரிசமமாய் நோக்கும் அன்பான குணம். சாதாரணமாய் கோபப்பட வைக்க முடியாத முகத்தோற்றம். தெளிந்த தெள்ளறிவும் பட்டறிவு கொடுத்த அனுபவமும் கொடுத்த நிதானம். எத்ற்கும் பதட்டமடையாமல் பொறுமையாய் அனைத்தையும் கையாளும் பக்குவம். இவை அனைத்திற்கும் சொந்தக்காரர், இந்தத் தொடருக்காக இந்த முறை நாம் சந்திக்கப்போகும் பிரபலம், கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்விக் கூடத்தின் இயக்குனர் முனைவர். R.நந்தகோபால் Ph.D. அவர்கள்.

“வாங்க உட்காருங்க” என்று அன்பாய் உபசரிக்கிறார். “என்ன சாப்ட்றீங்க” என்ற அவரது உன்மையான உபசரிப்பில் அவருடைய அன்பு மிளிர்கிறது. எந்தவித பந்தாவுமின்றி எளிமையான கொங்குத் தமிழில் நம்மிடையே  உரையாடுகிறார்.
அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார். இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. வாழ்க்கையில் வெற்றியடைந்த எல்லோரும் தவறாமல் செய்யும் காரியம் அது.   தேன் கலந்த கிரீன் டீ அருந்தி விட்டு  5.30 மணிக்கெல்லாம் பீளமேட்டில் உள்ள கல்லூரி மைதானத்திற்கு வந்து விடுகிறார். அந்த மைதானத்தில் 145 மரங்கள் நட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அம்மரங்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் வரத்து அமைக்கப்பட்டிருக்கிறது. இம்மரச்செடிகளுடனே சுமார் 45 நிமிடங்கள் நடந்து கொண்டே சொட்டு நீர்க் குழாய்களை சரிவர மரங்களுக்குத் திருப்பி விடுகிறார். நமது சுற்றுச்சூழலின் மேல் அவருக்குள்ள பொறுப்புணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நடைப் பயிற்சி செய்து கொண்டே இப்பணிகளை சரிவரச் செய்கிறார். பிறகு 6.30 மணிவாக்கில் கல்லூரியில் உள்ள ஜிம்மில் சுமார் 1 மணி நேரம் பயிற்சி. ஸ்டெரச்சிங், தசைகளை வலுப்படுத்துதல் போன்ற பயிற்சிகளை பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்கிறார்.
8 மணிக்கு காலை உணவாக சிறுதானியங்களில் செய்த ஏதாவது ஒரு உணவு.  இட்லி, பூரி, பொங்கல் போன்றவற்றைத் தவிர்த்து விடுகிறார். 11 மணிவாக்கில் மீண்டும் கிரீன் டீ. சர்க்கரையை அறவே தவிர்த்து விடுகிறார். மதிய உணவில் கண்டிப்பாய் ஒரு கீரை. சப்பாத்தி, பருப்பு, நிறையக் காய்கறிகள். தயிர் சேர்ப்பதில்லை. மாறாக மோர் சேர்த்துக் கொள்கிறார். மாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலேயே ஏதாவது ஒரு சுண்டல். பிஸ்கட், கேக், பப்ஸ் போன்ற உணவு வகைகளுக்கு தடா!
கையில் ‘வாட்ச்’ போன்ற கருப்பு நிற பட்டையைக் கட்டியிருக்கிறார். ஆனால் அது வாட்ச் அல்ல. “Fit Bit” என்ற சிறிய மின்னணுக் கருவி அது. அந்தக் கருவியில் உள்ள சின்ன சிப் ஒன்று, ஒரு நாளில் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம், எவ்வளவு அடிகள் எடுத்து வைக்கிறோம், எவ்வளவு கலோரிகளை நாம் எரிக்கிறோம் போன்ற தகவல்களைத் தருகிறது. அந்தப் பட்டையை நமது செலபோனிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ அல்லது டேப் (Tab) பிலோ இணைத்து விட்டால் சகல விபரங்களும் நமது விரல் நுனியில். “இதப் பாருங்க, நான் காலையிலிருந்து இது வரைக்க்கும் 6 1/2 கிலோ மீட்டர் நடந்துருக்கிறேன். 9428 அடிகள் எடுத்து வைத்திருக்கிறேன். 1450 கலோரிகள் தீர்ந்திருக்கிறது” என்று புள்ளி விபரங்களைக் காட்டுகிறார். மை காட்! நாம் தினசரி செய்யும் காரியம்தான். அதைக் கூட அறிவியல் முறைப்படி தகவல்களாக பதிந்து வைத்திருக்கிறார்.  ” ஒரு நாளில் நாம் நடக்க வேண்டிய தூரம், எரிக்க வேண்டிய கலோரி போன்றவைகளைத் தெரிந்து கொள்வதன்மூலம் அன்றன்றைய குறிக்கோள்களை அடைய முடியும்”. தான் கற்றுக் கொடுக்கும் மேலாண்மைத் தத்துவங்களை சீரிய முறையில் அவர் நடைமுறைப் படுத்துவதின் உதாரணம் அது! 
  • அரிசி கோதுமை தவிர்த்து விடுகிறார்.
  • கேக், பப்ஸ், பீட்ஸா, பர்கர் போன்றவற்றிற்கு ‘ஸ்ட்ரிக்ட்லி நோ’
  • ஸாஃப்ட் டிரிங்க்ஸ், பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றிற்கு தடா
  • சிறுதானிய உணவுகள், கைக்குத்தல் அரிசி போன்றவை மிக விருப்பம்
  • தயிர், பால் கிடையாது. மோர் மட்டும்
  • நடைப்பயிற்சி, ஜிம் தவறுவதில்லை
அசைவம் சாப்பிடுகிறவர்தான் என்றாலும் தற்போது முழுவதுமாக சைவத்திற்கு மாறி விட்டார். தன்னுடைய பணிச்சூழல் காரணமாக அடிக்கடி 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட நேர்ந்தாலும் நாண், பீட்ஸா போன்ற உணவுகளை அறவே தவிர்த்து விடுகிறார். மாறாக வெஜிடபிள் சாலட், சூப் போன்றவைகளை எடுத்துக் கொள்கிறார். இரவு 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்கிறார். உணவில் உப்பைக் குறைவாக சேர்த்துக் கொள்கிறார். சர்க்கரையை அறவே சேர்ப்பதில்லை.
இன்றைய இளைஞர்களுக்கு என்ன மாதிரியான ஹெல்த் டிப்ஸ் வழங்க விரும்புகிறீர்கள்?
இன்றைய இளைஞர்களின் கடுமையான பணிச்சூழல் அவர்களின் வாழ்க்கை முறையில் தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இரவு வெகு நேரம் கண் விழித்து படிக்கிறார்கள் அல்லது வேலை செய்கிறார்கள். பெரும்பாலான இளைஞர்கள் காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.  தவிரவும் காலை 11 மணிக்கு பப்ஸ் கூல்டிரிங்க்ஸ் போன்றவைகளை உண்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வந்தே ஆக வேண்டும். அவர்கள் உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும். ஏதாவது ஒரு விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டே ஆக வேண்டும். இது அவர்களின் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நல்லது. அவர்களுடைய வாழ்க்கை முறையை, எவ்வளவு இடையூறு இருந்த போதிலும், மாற்றிக் கொள்வது நல்லது.
உண்மையில் “நலமான கோவை”யின் நோக்கமும் இதுவே. உடல் நலம் சார்ந்த புரிதல்களில் நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் நமது கோவை மக்களின் நலம் மேம்படுவதே எமது நோக்கம்.
மிக முக்கியம்: இவர் புகை பிடிப்பதில்லை
மது அருந்துவதில்லை.

0 comments:

கருத்துரையிடுக