Mr.M.Settuநாம் என்றாவது பறவைகளைக் கவனித்திருக்கிறோமா? குருவி, மைனா போன்ற சிறிய பறவைகளோடு பேசியிருக்கிறோமா? நமது சமூக வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருக்கின்ற காகத்தோடு நாம் உரையாடியிருக்கிறோமா? உடல் முழுக்கக் கருமையும் கழுத்துப் பகுதியில் மட்டும் சாம்பல் நிறமோடு சிறிய அலகால் கொத்தித் தின்னும் அந்த எளிய பறவையை மிக அருகில் பார்த்து அதன் அழகில் மெய் மறந்து போயிருக்கிறோமா? குயிலின் குரலை இனிமை என்று எல்லோரும் சொல்வோம்.மயில் அழகு என்று எல்லோரும் கொண்டாடுவோம். ஆனால் , “ காக்கையின் சிறகில் நந்தலாலா “ வைக் காண ஒரு பாரதியால்தான் முடியும். அவ்வாறு தினசரி காக்கைளோடும், மைனாக்களோடும், சிறு குருவிகளோடும் உரையாடியபடியே தினசரி தனது நாளைத் தொடங்கும் ஒரு எளிய மனிதரின் நல்வாழ்வுப் பழக்கங்களை இந்த முறைப் பார்க்கப் போகிறோம். பேருக்குத்தான் எளிய மனிதர் என்றாலும் வகிக்கும் பதவிகளும், ஆற்றும் பணிகளும் எழுத ஒரு 40 பக்க நோட்டு கொள்ளாது,
  • கோயம்புத்தூரில் ISO 9001. 14001 மற்றும் ISO 18001 போன்ற சர்வதேச தரசான்றிதழ்களைப் பெற்று 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சிண்டிகேட் எக்ஸ்போர்ட்ஸ் (பி) லிமிடெட்., என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
  • பொள்ளாச்சியில் சுமார் 3000 மாணவர்களையுடைய ISO NAAC ‘A’ தர சான்றிதழ்களைப் பெற்று தன்னாட்சிக் கல்லூரியாக விளங்கி வருகின்ற ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் தலைமை இயக்குனராகவும் மற்றும் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் இயக்குனராகவும் செயலாற்றுகின்றார்.
  • பல அறக்கட்டளைகளின் தலைவர், துணைத்தலைவர். இயக்குனர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றி சமுதாயத்திற்காக பணியாற்றி வருகின்றார்.
  • கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு மற்றும் திட்டக்குழு உறுப்பினராக பணியாற்றிவர். மேலும் பல பல்கலைக் கழகங்களுக்குட்பட்ட கல்வி நிறுவனங்களில் நிர்வாகக் குழு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றி வருகின்றார்.

மற்றும் இவரது சாதனைகள் :
  • கோவை மேலாண்மை சங்கம், கோவை உற்பத்தித்திறன் குழுவின் தலைவராகவும், PSG மேலாண்மைத்துறை முன்னாள் மாணவர் தலைவராகவும், இந்திய தொழில் வர்த்தகசபையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலத்தின் கல்விக்குழு அமைப்பாளராகவும்,நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
  • 30 வருடங்களுக்கும் மேலாக லட்சுமி குழுமம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தொழில்துறை திட்டம் வகுத்தல் , ஏற்றுமதி இறக்குமதி, விற்பனை, நிதி மற்றும் தொழிலாளர் நிர்வாகம் போன்ற துறைகளில் மிகச்சிறந்த அனுபவங்களைப் பெற்றவர்.
  • மேலாண்மைத்துறையில் இவர் ஆற்றிய சேவைக்காக புதுடெல்லியில் (New Delhi) உள்ள அனைத்திந்திய மேலாண்மைச்சங்கம் இவருக்கு சிறப்பு அங்கத்தினர்(Fellowship)  என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
  • இளநிலை வணிகவியல் (BCom)  மற்றும்முதுநிலை மேலாண்மை (MBA) படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
  • கோட்டூர் மலையாண்டிபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சிறந்த முன்னாள் மாணவர் விருதும், பொள்ளாச்சி NGM கல்லூரியின் சிறந்த முன்னாள் மாணவர் விருதும், மற்றும் கோவை PSG பொறியியல் கல்லூரியின் 1982 ஆம் வருடத்திற்கான சிறந்த மேலாண்மைத்துறை மாணவருக்கான விருதும் முன்னாள் மாணவர் விருதும் பெற்றிருக்கின்றார்.
  • பொள்ளாச்சி சுழல் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுளார்.
  • இவர் இந்தியப் பொருளாதாரம், நிர்வாகவியல்,நிதி நிர்வாகம், பன்னாட்டு தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி, தேசிய நலன்,உயிர்கல்வி,ஆசிரியப்பணி,சார்ந்த நூற்றுக்கணக்கான கருத்தரங்குகளில் சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றியிள்ளார்.
  • இவர் தன் ஆன்மீக அனுபவங்களின் வெளிப்பாடாய், ஞானமலர்கள் எனும் கவிதைத் தொகுப்பையும், முழுமையாக வாழும் கலை என்னும் நடைமுறைக்கு உகந்ததோர் வாழ்வியல் நூலையும் இயற்றியுள்ளார்.

இத்தனைக்கும் சொந்தக்காரர் திரு.சேட்டு அவர்கள் .
“எப்படிங்க சமாளிக்கிறிங்க?” என்றால் உரத்துச் சிரிக்கிறார்.
“அமைதியாய் சந்தோசமாய் வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் எதுவுமே பிரச்சினை இல்லை. வாழ்க்கை என்பது மிகவும் சந்தோஷமான பயணம். அதில் கவலைகளுக்கு இடம் கொடுத்தால் பயணம் இனிக்காது. எதையும் எதிர்பார்த்து ஒரு காரியம் பண்ணும்போது, அது நடக்காமல் போனால் நமக்கு ஏமாற்றம் ஏற்படும். எதையும் சுயலாபத்திற்காக, சுயநோக்கதிற்காக எதிர்பார்பதில்லை. எனவே, எல்லா நிகழ்வுமே சந்தோஷமாய் கழிகின்றன.”
பல்வேறு பணிகள், பல்வேறு பொறுப்புகள், எப்படி நேர நிர்வாகம் பண்ணுகிறீர்கள்?
“எதெது முக்கியம், எதெது முக்கியமல்ல என்று தீர்மானித்து விடுவேன். எது முதலில், எது அடுத்தது, என்று தீர்மானித்து விட்டாலே ஒரு ஒழுங்கு வந்து விடும். அன்றன்றைய வேலையை அன்றன்றே செய்து விடுவேன். எதையும் தள்ளி போடுவது கிடையாது.”
காலையில் 5.30 மணிக்கு அலாரம் வைத்தது போல் எழுந்து விடுகிறார். 5.30 மணி முதல் 6.00 மணி வரை காலை கடன்களை முடித்துக் கொண்டு தனது வீட்டின் பால்கனியில் குடும்பத்துடன் அமர்ந்து டீ, காபி,பிஸ்கட்,ரஸ்க், என்று ஏதாவது ஒன்றுடன் இனிமையான காலைப்பொழுதை அனுபவிக்கிறார். கூடவே அந்நேரத்திற்கே விருந்தினர்களாய் வரும் மைனாக்கள்,குருவிகள்,காக்கைகள் என்று அரட்டை.
6.30 லிருந்து 7.30 மணி வரை மனைவியோடு வாக்கிங். 7.30 லிருந்து 8.30 மணி வரை அன்று செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விடுகிறார். மெயில் செக் பண்ணுவது, பதில் அனுப்புவது என்று சகலமும். 9 மணி வாக்கில் காலை உணவு. இது தான் வேண்டும் என்ற எந்த விருப்பம் இல்லை. பால் அல்லது மோருடன் கலந்த ராகி கூழ் என்றால் சற்றே விருப்பம் அதிகம். சுவையாய் இருக்கிறதே என்று எதையும் அதிகமும் உண்ணுவதில்லை. அலுவலகத்தில் 11 மணிக்கு டீ,காபி என்று எந்த கட்டாயமும் இல்லை. 12.30 லிருந்து 1மணிக்குள் மதிய உணவு. அதிலும் எந்த கட்டுப்பாடு இல்லை. ஆனால் பழங்கள் குறிப்பாக ஆப்பிள்,பப்பாளி அதிகம் சேர்த்துக் கொள்கிறார். காய்களில் பாவக்காய் விருப்பம். 3மணி வாக்கில் லெமன் டீ. அதுவும் கட்டாயமில்லை, இரவு உணவாக சப்பாத்தி,இட்லி,தோசை ஏதாவது ஒன்று. அதுவும் அளவாகவே உண்கிறார். அதிக பட்சமாக 10.30 மணிக்கெல்லாம் உறங்க சென்று விடுகிறார்.
இவ்வளவு பணிகளை வைத்து கொண்டு எப்படி சீக்கிரமே உறங்கச் சென்று விடுகிறீர்கள்?
“ஒரு மனிதனுக்கு தூக்கம் அதுவும் ஆழ்ந்த அமைதியான தூக்கம் மிகவும் முக்கியம். அவ்வாறான தூக்கத்தை தியாகம் செய்து பெறுவது ஒன்றும் அவ்வளவு முக்கியமாக படவில்லை. காரியங்களை தள்ளி போடாமல் அன்றன்றே அப்போதப்போதே செய்து விட்டால், பணிச்சுமை நம்மை அழுத்தாது. நேரத்தில் தூங்கி நேரத்தில் எழுவது நல்ல பழக்கம்.”
உணவிற்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார். ஒவ்வொரு முறை உணவருந்தும் போதும்,
“உண்ணும் உணவிந்த
உலகத்து மக்களுக்கும்
உயிருள்ள மாக்களுக்கும்
உண்ணும் எனக்கும்
உள்ளளவும் உரியதாகுக ”
என்னும் பாடலை மனதிற்குள் மனனம் செய்வது போல் சொல்கிறார். இது இவருடைய 17 வது வயதில் இவர் எழுதிய கவிதை,
“உணவுக்கு மரியாதை செலுத்த வேண்டும். இது எனது தந்தையிடம் இருந்து நான் கற்ற பாடம், எனது தந்தை ஒரு சோற்றுப் பருக்கை வீணாவதைக்கூட அனுமதிக்கமாட்டார். அவர் ஒரு பொழுதும் இதை செய் அதை செய் என்று சொன்னதில்லை ஆனால், வாழ்வின் ஆகச்சிறந்த மதிப்பீடுகளை (values) அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் ”
இந்த மதிப்பீடுகள்தான் அவர் நல்ல பழக்கங்களோடு இருக்க உதவுகிறது. மது அருந்துவதில்லை. புகை பிடிப்பதில்லை.எதன் மீதும்- புகழ்,பணம் என்று-தேவையற்ற ஆசைகளை வைத்துக் கொள்வதில்லை. நல்ல மன அமைதியோடு, நல்ல உடல் நலத்தோடு வாழ இது உதவுகிறது. நிறைய படிக்கிறார். நிறைய இசை கேட்கிறார். உடல் நலமும் மன நலனும் இருந்தால் வாழும் ஒவ்வொரு நிமிடமுமே தியானமாகி விடுகிறது என்கிறார்.
மனதிற்கும்,உடலுக்கும் ஒவ்வாத ஒன்றையும் செய்வதில்லை.

“இன்றைய இளைஞர்களுக்கு என்ன மாதிரியான ஹெல்த் டிப்ஸ் வழங்க போகிறீர்கள்?”
உடல் நலனும் மன நலனும் மிகவும் முக்கியம் உடலை நன்றாக வைத்துக் கொள்ள ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள். வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டு விரைவாகச் செய்து முடியுங்கள். தூக்கம் ரொம்ப முக்கியம். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு வேலை செய்கிறேன் என்று உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களை நீங்களே அறியப் பழகுங்கள். நான் யார் என்று அறிதலே முதற்படி. நான் யார் என்று ஆன்மாவைப் பற்றிய அறிவு வந்து விட்டாலே மனம் அமைதியாகி விடும். கடைசியாக நமது இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை. 2000 வருடங்களாக நமது நாடு செல்வச் செழிப்பில் இருந்திருக்கிறது. எல்லா விஷயங்களிலுமே நாம் முன்னனியில் இருந்திருக்கிறோம். நாம் பொதுவாக மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்கிறோம். அதில் ஒரு சிறிய மாற்றம். மாதா, பிதா, குரு, தேசம், தெய்வம் என்று இயங்கினோம் என்றால் வருங்காலத்தில் நாம் தான் NO.1’.
வார்த்தைகளில் நம்பிக்கை ஒளிர்கிறது. இடைவிடாது தொலைபேசி அழைப்புகளினுடையேயும் தொடர்பு அறுந்து போகாமல் தெளிவாய் பேசுகிறார்.
“நல்ல எண்ணம், நல்ல உடல்,தூய்மையான மனது, நல்ல செயல்கள். இவை நான்கும் இருந்தால் நமது வாழ்க்கை முழுமை அடைந்து விடும்”

  • உணவிற்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார்.
  • அசைவ உணவு அறவே இல்லை.
  • லெமன் டீ, சுக்கு காபி, சுக்கு டீ, அதுவும் ஒரு நாளைக்கு 1 கப் அல்லது 2 கப்.
  • ஹோட்டல் உணவுகளில் விருப்பமில்லை. வீட்டில் வைக்கும் கொத்தமல்லி ரசம் மிகவும் பிடிக்கும்.
  • 6 மாதங்களுக்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் கட்டாயம்.
  • வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசிக்கிறார்.
  • நிறையப் படிக்கிறார். திருக்குறள் மிகவும் பிடித்த புத்தகம்.
  • நிறைய இசை கேட்கிறார்.கஜல் ரொம்ப பிடிக்கும்.

மிக முக்கியம்: இவர் மது அருந்துவதில்லை
இவர் புகை பிடிப்பது இல்லை
இவர் அசைவ உணவை உண்பதில்லை

0 comments:

கருத்துரையிடுக